Friday 22 November 2019

மரம்


மரம்   


மரத்தின் அவசியம்:

மரம் வளர்ப்போம், நலம் பெறுவோம் என்பது இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாகும். ஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறது இப்படியே இன்னும் பத்து ஆண்டுகள் போனால் தமிழகமே பாலைவனம் ஆகிவிடுமாம். இதனைத் தடுக்கத் தான் பல அமைப்புகள் ஆங்காங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்கின்றன. இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து மரங்கள் வளர்க்க ஆவன செய்கின்றன.

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட மாட்டோமா? வேண்டாம், நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.இதனைத்தான் தொலைநோக்குப் பார்வை என்றும் பொது நல சிந்தனை என்றும் கூறுகின்றனர்.

சுயநலத்தின் பிடியில் சிக்கிய மானிட சமுதாயம் இயற்கையை அழித்து, மரங்களை வெட்டி, காடுகளைக் குறைத்து தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறது. இவ்வறிவற்றச் செயலைத் தடுக்க வேண்டும். இத்தருணத்தில் மரங்களின் நலனையும், பயனையும் சிந்திக்கத் தந்தது மிகவும் சரியானதே!

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :

தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன் படுத்துவதனாலும் மாசு நிறைந்த இச்சூழலினைத் தூய்மையாக்குபவை மரங்களே! ‘மரங்கள் ஆக்ஸிஜன் தொழிற்சாலைஎன்ற வாசகம் நாம் அறிந்ததே அல்லவா! ஆம், மரங்கள் காற்றினை தூய்மை செய்கின்றன, மேலும் நிழலைத் தருகின்றன. ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்என்பது பொன்மொழி. வெப்பம் அதிகமாகக் காணப்படக் காரணம் என்ன? நாம் மரங்களை அழித்ததும், அதனால் ஏற்பட்ட நிழலின்மையுமே காரணமாகும்.
எனவே மரங்களை வளர்க்க வேண்டும். மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாய் விளங்குகின்றன. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் அமைய உதவுகின்றன. நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்ய பெரிதும் துணை செய்பவை மரங்களே!
மரங்கள் நமக்கு பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளைத் தருகின்றன. அதுமட்டுமா சிறந்த மருந்துகளையும் உருவாக்க உதவுகின்றன. மேலும் கப்பல் கட்டுவதற்கும், மரவேலைப்பாடு நிறைந்த பெரிய பொருட்கள் முதல் தீக்குச்சி, தீப்பெட்டி போன்ற சிறிய பொருட்கள் வரை பல வகையான பொருள்களைத் தயாரிக்கவும் உதவுகின்றன.
இவ்வாறு பல வகையில் உதவும் மரங்களை நாம் வளர்க்க வேண்டும். நிறைய மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்க வேண்டும்.. இவை நம் நாட்டின் செல்வங்கள். அக்காலத்தில் தாத்தா மரம் நட்டால் பேரன் பயனடைவான். இக்காலத்தில் மரத்தினை வைத்தவனே பயனையும் துய்க்க ஆசைப்படுகிறான். இதுதான் இன்றைய நிலை. விஞ்ஞானத்தினால் முடியாதது என்ன? செயற்கை உரங்களைச் சேர்த்து உடன் பயனெய்த வழிவகை செய்கிறோம். ஆனால் அதன் பயனும் நமக்கு குறைந்த அளவிலேயே நன்மை தருகின்றது என்பது வெள்ளிடை மலை அல்லவா? ஏன் இந்த அவசர கதி? மனிதனின் பொறுமை என்னவாயிற்று? நிதானம் எங்கே போயிற்று? நிதானம் பிரதானம் அல்லவா! எனவே எல்லோரும் இதை நினைவில் கொள்ளவேண்டும்.
இயற்கையின் வழியில் செல்வோம்! மரங்களையும், பயனுள்ள செடி, கொடிகளையும் வளர்ப்போம்! பயன் பெறுவோம்! பசுமை பாரதத்தை உருவாக்குவோம்!!
மரம் என்றாலே நன்மை தான்
மரங்களால் சுற்றுச்சூழல்வளமாகும் மனித வாழ்வு நலமாகும். மரம் வளர்க்க மழை பொழியும்; மழை பொழிய வறுமை ஒழியும்.ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ; நாளை மண்ணை மகிழ்வாய் ஆள.

மரம் மனிதனின் மூன்றாவது கரம். இரு கைகளைக் கடந்து இயற்கையைக் காக்கும் மூன்றாவது கரமாக உள்ளது மரம். சுற்றுச் சூழலைச் சுகமாய் காப்பதில் மரங்கள் முதன்மையான காரணியாக விளங்குகின்றன. மரங்கள் பூக்கும் போதெல்லாம் மனித மனங்களும் பூக்கின்றன. ஆதி மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த போது இன்பமாக வாழ்ந்தான். மனிதன் நிர்வாணமாக இருந்த போது, மரம்தான் தன் இலைதழைகளை, மரப்பட்டைகளை ஆடையாகக் கொடுத்து மானம் காத்தது.

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இன்று மரங்கள் அழிக்கப்பட்டு இயற்கை நிர்வாணமாகி வருகிறது. மரங்கள் அதிகளவு இருக்கும் வரை சுற்றுச்சூழல்சுகமாக இருக்கும். மரங்கள் அழியத் தொடங்கும் போது மனித சமுதாயத்தின் அழிவும் தொடங்கிவிடும்.



மரங்களும் கடவுள்களும்

ஆதிகால மனிதன் இயற்கையை கடவுளாக வணங்கினான். மரவழிபாடு அன்று இருந்தது. கடவுள் மரங்களில் உறைந்துள்ளார் என்ற நம்பிக்கை இன்றும் நம் மக்களிடம் உள்ளது. சங்க
இலக்கியமும், பக்தி இலக்கியமும் இதைப் பதிவு செய்துள்ளன. நோயால் மக்கள் இறந்த போது தங்களையும், தங்கள் சந்ததியை யும் காப்பாற்றிய தாவரங்களை மக்கள் தெய்வமாக வழிபட்டனர்.

பின்னாளில் தெய்வ உறைவிடமாக இருந்த மரம் அழிக்கப்பட்டு, கட்டடங்கள் எழுப்பப்பட்டு கோவில்கள் உருவாக்கப்பட்டன. மனிதர்களால் மரங்கள் தெய்வ நிலையை இழந்தன.
இயற்கை சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்பினான். அதுவே மரவழிபாடாக மலர்ந்தது. நாட்டுப்புறத் தெய்வங்களான சிறு தெய்வங்கள் ஏதேனும் ஒரு மரத்தினடியில் அமைந்திருப்பதையும், மரத்தோடு இணைந்து அவை வழிபடப்படுவதையும் நாம் காணலாம். கடவுளோடு கைகோர்த்துநிற்கின்ற மரங்கள் மனிதனின் பார்வையில் இருந்து தப்பி வாழ்ந்துவருகின்றன.

மரங்களும் மனிதர்களும்
ஒரு காகம் தன் வாழ்நாளில் எச்சங்கள் மூலமாக பல்லாயிரம் மரங்களை நடுவதாக ஆய்வு
சொல்கிறது. மனிதர்களாகிய நாம் எத்தனை மரங்களை நட்டு வைத்துப் பராமரிக்கிறோம்? எனக் கேள்வி கேட்டால் அதற்கான பதில் என்னவாக இருக்கும் என் நாம் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். 'வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என்ற முழக்கம் முன்பு. 'ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்' என்ற முழக்கம் இன்று வழக்கமாகி வருகிறது.

நம் வீட்டைச் சுற்றி பத்து வகையான மரங்கள் இருக்க வேண்டும் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.'வீட்டிற்கு முன் ஒரு வேப்ப மரம். பக்கத்தில் ஒரு முருங்கை மரம், பப்பாளி மரம். குளிக்கும் தண்ணீர் போகுமிடத்தில் வாழை மரம். பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம், ஒரு எலுமிச்சை மரம். அதன் நிழலில் ஒரு கறிவேப்பிலைச் செடியும், நெல்லிச் செடியும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம். இடம் இருந்தால் பலா மரம், ஒரு மாமரம். இப்படி இருந்தால் பசியுடன் ஒருவர்கூடத் துாங்க மாட்டார்கள்' என நம்மாழ்வார் கூறுகிறார்.

பத்து மரங்கள் நட இயலாவிட்டாலும், இடமில்லாவிட்டாலும் ஒத்த மரமாவது நடலாம். போதி மரம்தான் நடவேண்டும் என்றில்லை; நமக்குப் போதிய மரங்கள் நட்டு வைத்தால் கூட போதும். மரங்களின் மகத்துவத்தை, வளரும் சமுதாயமாக உள்ள மாணவர்களின் மனதில் விதைக்க வேண்டும். பிறந்தநாளின் போது மரம் நட ஊக்குவிக்க வேண்டும்.

இனிப்புகள் வழங்கி கொண்டாடும் மாணவர்களிடம், ஒரு மரமோ, பூச்செடியோ நட்டு வைத்து அந்த மாணவனையே பள்ளியில் பராமரிக்கச் செய்து வரலாம். மரம் வளர மாணவன் வளர்வான்; மாணவன் வளர மரம் வளரும். பத்தாண்டுகள் கழித்து, தான் பயின்ற பள்ளிக்கு வரும்போது மரமும் வளர்ந்திருக்கும். அந்த மாணவனும் கல்வியால் வாழ்வில் வளர்ந்திருப்பான்.

மரங்களும் பயன்களும்

கடும் கோடை வெயிலில் தான் மரங்களின் மகத்துவத்தை நம் மனங்கள் அறியத் தொடங்குகின்றன. காடுகள் அழிக்கப்பட்டு, கான்கிரீட் காடுகளாக மாறிவிட்ட மாநகரங்களில் தன் வாகனத்தை நிறுத்த எங்கேனும் ஒரு மரம் கிடைக்காதா என தேடுகிறோம். பல பள்ளிகளில் இன்றும் மரங்கள்தான் தன் கிளைக் கரங்களால் மாணவர்களுக்கு வகுப்பறையாக வாழ்ந்து வருகின்றன. வாடகையின்றி வசிக்கும் பறவையினங்கள் மரங்களின் பழங்களை உண்டு, நன்றிக்கடனாக தன் எச்சங்களின் மூலமாக மங்களைப் பெருக்குகின்றன.

சாதாரண அளவுள்ள ஒரு மரம் தனது ஆயுட்காலத்தில் 32 லட்சம் ரூபாய் பெறுமானமான சேவையைச் செய்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட
துாய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். முன்பெல்லாம் தண்ணீர் இலவசமாகக் கிடைத்தது. இன்று காசு கொடுத்து வாங்குகிறோம். காற்றையும் காசு கொடுத்து வாங்கவேண்டிய நிலை வந்து விட்டது. வரும் காலத்தில் நம்மிடம் பணம் நிறைய இருக்கும். ஆனால் தேவையான அளவிற்கு குடிநீர், துாய்மையான காற்று கிடைக்காது.

நம் பிள்ளைகளுக்குசொத்துக்களை விட்டுச் செல்வதை விட மரங்களை விட்டுச் செல்வோம். ஒரு மரம் வெட்டப்பட்டுக் கீழே விழும் போது, மனித இனத்தின் மகிழ்ச்சிச்சங்கிலி அறுபடத் தொடங்குகிறது.

உறவுகளை அறிமுகம் செய்வதைப்போல நமது பிள்ளைகளுக்கு மரங்களை அறிமுகம் செய்து வைப்போம். வனங்களுக்கு அழைத்துச் சென்று மாணவரது மனங்களைப் பசுமை ஆக்குவோம். மண் கொடுத்த சீதனமான மரங்களை சேதாரமின்றிக் காப்போம். மரம் போல் வாழ்வோம்!






புவி வெப்பமடைதலை தடுக்கிறது
மரம் வளர்ப்போம் வாருங்கள்
மரம் ஒரு வரம் பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.

காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.

இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நடவேண்டும்
ஒவ்வொரு மரத்திலும் இலைகள் இருக்கும். அந்த இலைகளில் துளைகள் இருக்கும். துளைகள் என்றால் ஓட்டைகள்தானே என்று இலைகளில் எங்கே ஓட்டைகளைக் காணோமென்று தேடத் தொடங்கிவிடாதீர்கள். அது நுண்ணோக்கியில் பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ளும் அளவில் மிக நுண்ணியதாக இருக்கக்கூடிய நுண்துளைகள். அது இலைகளில் மட்டுமில்லை, மரத்தின் தண்டுகளிலும் இருக்கும். விளக்க எளிமையாக இருப்பதற்காக நாம் இப்போதைக்கு இலைகளை வைத்தே பேசுவோம். அந்த நுண்துளைகளின் மூலம்தான் மரம் தனக்குத் தேவையான வாயுக்களை கிரகித்துச் சுழற்சி முறைகளில் வெளியேற்றுகிறது
இலைகளிலுள்ள துளைகள் மரம் சுவாசிப்பதற்கு மட்டும் உதவுவதில்லை. மரங்களின் வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது. என்ன, மரங்களுக்கு வியர்க்குமா
கேட்பதற்கே விசித்திரமாக இருக்கின்றதா! ஆம், மரங்களுக்கும் வியர்க்கும். நம் உடலிலிருந்து ஏன் வியர்வை வடிகின்றது? மனித உடல் வியர்வையை வெளியேற்றுவதன் மூலம் தன்னைத் தானே குளிர்வித்துக்கொள்கின்றது. அதுபோலத்தான் மரங்களும். மரங்கள் தாம் உறிஞ்சும் நீர்ச் சத்து முழுவதையும் வைத்துக்கொள்வதில்லை. அதைத் தன் ஆற்றல் தேவைக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்திக்கொண்டு மீதமாகும் நீரை இலைகளின் துளைகள் வழியாகச் சிறிது சிறிதாக வெளியேற்றிவிடுகின்றன. அப்படி வெளியேறும் நீர்ச்சத்து வளிமண்டலத்தில் கலந்து ஈரப்பதத்தை அதிகப்படுத்துகின்றது. அந்த ஈரப்பதத்தை உறிஞ்சும் மேகங்கள்தான் மீண்டும் மழையாகப் பெய்கின்றது. ஆனால், இந்தச் செயல்முறை மழையாக மாறுவதற்குத் திரும்பிய பக்கமெல்லாம் மரங்களை நட்டுக்கொண்டே போனால் மட்டும் போதாது.
மரங்கள் மழையைக் கொடுக்க வேண்டுமென்றால், நமக்குத் தேவை காடுகள். நகரங்களில் வெயில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கும். அதிலிருந்து தப்பிக்க நகரவாசிகள் தேர்தெடுக்கும் விஷயங்களில் சமீபகாலமாக அதிகமாகியுள்ள ஒன்று காடுகளுக்குப் பயணிப்பதும் மலையேற்றம் மேற்கொள்வதும். இங்கும் அதே வியர்வைதான். அங்கும் அதே வியர்வைதான். பின்னர் ஏன் மலையேற்றம் செல்கிறார்கள். எல்லாம் அங்கு கிடைக்கும் குளிர்காற்றைச் சுகிப்பதற்குத்தான். அது எப்படி, நகரங்களில் வெப்பம் தாங்காமல் நாம் தவிக்கும்போது அங்கு மட்டும் அவ்வளவு குழுமையாக இருக்கலாம்! என்ன செய்வது அதுதான் காடுகளின் மகிமை

ஒற்றை மரம் ஒரு நாளைக்குத் தோராயமாகச் சுமார் 300 லிட்டர்கள் வரை தண்ணீரை வியர்வையாக வெளியேற்றுகிறது. ஒரு மரத்துக்கே சில நூறு லிட்டர்கள் என்றால், நினைத்துப் பாருங்கள் அது ஒரு காடு. அங்கு எத்தனை ஆயிரம் மரங்கள் இருக்கின்றன! அத்தனை ஆயிரம் மரங்களும் வியர்வை சிந்தும்போது அந்தக் காற்று எவ்வளவு குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்படித்தானே இருக்கிறது. அமேசான் காட்டில் நினைத்த நேரமெல்லாம் மழை பெய்யும் என்று கூறுவார்கள். சொல்லப்போனால், அங்கிருக்கும் மரக்கூட்டங்கள் வெளியிடும் நீரைச் சேமித்து வைக்க முடியாமல், "இந்தாங்கடா உங்க தண்ணிய நீங்களே வச்சுக்கங்க" என்ற பாணியில் மேகமே கொட்டித் தீர்க்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்..
மழை வர, மரத்தை நட்டால் மட்டும் போதாது. அதைப் பராமரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, காடுகளை அழித்துவிட்டு மரங்கள் வளர்த்துப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளலாம் என்ற கார்ப்பரேட் மனநிலை வளர்ந்துகொண்டிருக்கிறது. இது நடைமுறையில் சாத்தியமென்றால், ஏன் யானைகள் கிராமங்களுக்குள் நுழைகின்றன? ஏன் களைச்செடிகளால் சாப்பிட உணவின்றி மான்கள் குறைந்துவிட்டன? இரை கிடைக்காமல் சிறுத்தைகள், புலிகள் ஏன் ஊருக்குள் வருகின்றன

காடுகள் உயிர்த்திருக்க இவற்றின் இருப்பு அவசியம். அதன் உயிர்ப்புதான் நமக்கு மழையைப் பெற்றுத்தரும். மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற பதாகையைத் தூக்கி நிற்கும் எத்தனை நிறுவனங்கள், அரசுகள் அழிக்கப்படும் காடுகளைக் காப்பாற்றப் பேசியுள்ளார்கள். தன்னார்வலர்களின் மரம் நடும் முயற்சிக்கும் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் மரம் நடும் முயற்சிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நாம் உணர வேண்டும்

தன்னார்வலர்கள், ஊர்களுக்குள் மரம் நடுவது மழை வருவதற்காக மட்டுமல்ல. வெயில் காலங்களில் மக்களின் வெப்பத்தைக் குறைக்க அவற்றின் இருப்பு தேவை என்பதால். அவை, அதுபோக மழை பெய்வதிலும் ஓரளவுக்குப் பங்கு வகிக்கின்றன. அதுதவிர்த்துக் காடுகளின் குரலாக அவர்கள் ஒலித்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், நிறுவனங்களின் மரம் நடும் பதாகைக்குப் பின்னால் பல லட்சம் காடுகளைக் கொலை செய்ததற்குச் செய்யும் பிராயச்சித்தம் மறைந்திருக்கிறது. அந்தப் பிராயச்சித்தம் முழுமையடைவதுமில்லை, அதனால் நாம் மழை பெறப்போவதுமில்லை
இது போகும் வழியெல்லாம் தங்கள் நீண்ட கைத்தடிகளால் சின்ன குழிதோண்டி விதை போட்டே பல காடுகளை உருவாக்கியவர்கள் வாழும் நிலம். இந்நிலத்தில் லாப நோக்கோடு மரம் வளர்க்காமல்   சூழலியல் நோக்கோடு நிலத்துக்குரிய மரங்களை வளர்ப்போம். வெப்பத்தில் சாம்பலாகிக்கொண்டிருக்கும் நகரங்களைக் குளிர்விப்போம். அதேசமயம்,  இந்தியக் காடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்து மழை பெய்யவும் வழிவகுப்போம்.

மரம் வளர்ப்போம் வாருங்கள்
மரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம் வாருங்கள்…!

மரம் நடுதல் மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் நம்மால் முடிந்த அளவு நம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைக்கவும் , அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தியும் வருவோம்.

No comments:

Post a Comment