Wednesday 20 November 2019

இலுப்பை மரம்


இலுப்பை மரம்

பழந்தமிழர்களின் வாழ்வியலில் பிரிக்க முடியாத அங்கமாக இந்த இலுப்பை மரங்கள் இருந்து வந்தனஇருளை விலக்கிய பெருமை இலுப்பைக்கு உண்டு, மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்தில் கோயில்கள், வீடுகளில் தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெய்தான் பயன்படுத்தினர். நின்று நிதானமாக எரியும் என்பதால் பழங்காலங்களில் தீவட்டிகளில்  இந்த எண்ணெய்யே பயன்படுத்தப்பட்டது. பல மன்னர்கள், எண்ணெய்க்காகவே இலுப்பைத் தோப்புகளை உருவாக்கி, அவற்றை கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தார்கள்

மரங்கள் நிழலை மட்டும் தருவதில்லை. மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் சுவாசிக்க பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. இதுமட்டுமா, புவி வெப்பத்தைக் குறைத்து மழையைத் தருவிக்கின்றன.
இயற்கையின் படைப்பில் இத்தகைய அற்புதங்களைக் கொண்ட மரங்கள் மனிதனுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. காய்ந்த மரம் விறகாகவும், வெட்டிய மரம் வீட்டு உபயோகப் பொருளாகவும் பயன்படுகின்றன. இப்படி மரங்களின் பயன்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு மனித வாழ்வில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் இலுப்பை மரமும் ஒன்று. கண்மாய், ஏரி, குளம், கரைகளிலும், பூங்கா போன்ற இடங்களிலும் சாலை ஓரங்களிலும் பரந்து விரிந்து காணப்படும் மரம்தான் இலுப்பை.
இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்கிறது.
இதன் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டது.
இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு.

தாய்ப்பால் சரிவர சுரக்காத பெண்கள் பலவகையான மருந்து மாத்திரைகளை உட்கொள்வார்கள். இவை சில சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டு பண்ணும். இந்த இன்னலைப் போக்க இலுப்பை உதவுகிறது. இலுப்பை இலையை மார்பில் வைத்துக் கட்டிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

இலுப்பைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். இரத்தச்சோகை மாறும்.
இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், வெப்பத்தினால் உண்டான சுரம் நீங்கும்.
தீரா தாகம், நீர்ச்சத்து குறைபாடு போன்றவையும் நீங்கும்.
இலுப்பைப்பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தினால் இளைப்பு நீங்கும்.
காய்ந்த இலுப்பைப்பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு வந்தால் வீக்கம் மறையும்.
இலுப்பைப்பூவைக் காயவைத்து இடித்து வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான மாதவிலக்குக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.
இலுப்பைக் காய்
இலுப்பைக் காயை கீறினால் பால் வெளிப்படும். அந்த பாலை உடலில் தோன்றும் வெண் படலங்களின் மீது தடவினால் வெண்படலம் விரைவில் குணமாகும்.
இலுப்பைப் பழம்
இலுப்பைப்பழம் நல்ல இனிப்புச் சுவை உடையது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது.

விதை

இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டினால் வீக்கம் விரைவில் குணமாகும்.
நெய்(எண்ணெய்)-பிண்ணாக்கு
இலுப்பையின் விதையில் எடுக்கப்படும் எண்ணெய் உடலுக்கு வன்மையும் வனப்பையும் கொடுக்கும்.
எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையே பிண்ணாக்கு எனப்படும். இதை ஊறவைத்து நன்றாக அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் சரும வியாதிகள் நீங்கும். பழங் காலங்களில் இதனையே நம் முன்னோர்கள் பலர் சோப்பிற்குப் பதிலாக உபயோகித்து வந்துள்ளனர்.

இலுப்பையின் வேரை இடித்து நீரில் கலந்து கொதிக்கவைத்து குடிநீராக அருந்தி வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

No comments:

Post a Comment